Tuesday, December 29, 2009

Reply to தமிழ் சினிமா : விமர்சன சூழலும் நாயகிகள் எனும் நுகர்வுப் பொருளும்

தமிழ் சினிமா : விமர்சன சூழலும் நாயகிகள் எனும் நுகர்வுப் பொருளும்

நந்தாவின் மேல்படி பதிவுக்கான பதில்

தெரியும் உருவம் சரியில்லை என கண்ணாடியை வையலாமா?

சமுதாயம் எந்த ஒழுங்கமைப்பில் இருக்கிறதோ அதே ஒழுங்கமைப்புதான் அது படைக்கும் கலைவடிவங்களில் வெளிப்படும்.நம் வீடுகளில், பொது இடங்களில், அலுவலகங்களில் பெண்களை எப்படி நடத்துகிறோமோ, மதிக்கிறோமோ அப்படிதான் திரையில் பெண்களை நடத்துகிறார்கள்.

ஒரு பெண் ரோட்டில் நடந்தால்/பஸ் ஸ்டாண்டில் நின்றால் கல்லூரி இளைஞர்கள் என்ன செய்வார்களோ அதையே வெள்ளிதிரையில் நாயகன் செய்கிறான்.என்ன நம் இளைஞர்களுக்கு பாட வராது.அந்த குறையை "ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்" என பாடி கதாநாயகன் பூர்த்தி செய்கிறான்.கல்லா நிரம்பி வழிகிறது.

குட்டை பாவாடை அணியாதே, ஜீன்ஸ் போடாதே" என்பது சமூகத்தில் (மற்றும் தமிழ் இணைய குழுமங்களில்) பெண்களுக்கு இலவசமாக வழங்கபடும் அறிவுரை.அதை திரையில் விஜய் வழங்குகிறார். அந்த அறிவுரையை மீறும் பெண் பலாத்காரத்துக்கு அல்லது ராக்கிங்குக்கு உள்ளாவாள் என்பது எழுதப்பட்டாத சட்டம் மற்றும் எதிர்பார்ப்பு.ஜீன்ஸ் அணிந்து புட்டத்தை காட்டுபவள் ரேப்பை/சீண்டலை தானாக வரவழைத்துகொள்கிறாள்.சினிமாவில் ரேப்பை தடுக்க விஜய் இருக்கிறார்.தமிழ்நாட்டு தெருக்களில் விஜய் இல்லை.

தமிழ் சினிமா இப்படி இருக்கிறதே என வருந்தகூடாது.பதிலுக்கு தமிழ் சமூகம் இப்படி இருக்கிறதே என வருந்த வேண்டும்.அல்லது பெண்களை அட்வைஸ் செய்து திருத்துவது நல்லதுதான் என நினைத்தால் மகிழவும் செய்யலாம்.

துண்டு போட்டு தெருவில் நடக்கும் தலித் தன் மேலான வன்முறையை தானே வரவழைத்துகொள்கிறான் என ஒரு காலத்தில் நம் சமூகம் நம்பியது.(இன்றும் சிலர்/பலர் நம்புகின்றனர்)..."உனக்கு எதுக்கு வம்பு..கைல செருப்பை எடுத்துகிட்டு நடக்காம அவனுக இருக்கற தெருவில கால்ல செருப்பை போட்டுட்டு நடந்தா அவனுக சும்மா விடுவானுங்களா?நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன்..உன் இஷ்டத்துக்கு நடந்துக்கணும்னு நினைக்காம ஊர் வழக்கத்துக்கு மதிப்பு கொடு.." இப்படி அந்த காலத்தில் (இந்த காலத்திலும்) தலிதுகளுக்கு தரப்பட்ட ஆடை கட்டுபாட்டை பற்றிய அட்வைஸ்கள் அள்ளி வீசபட்டிருக்கும்.

மேலாடை போட்டால் ஆண்டைகளுக்கு ஏன் கோபம் வருகிறது?அது தலித்துகள் ஆண்டைகளின் மேலாதிக்கத்தை நிராகரிக்கிரார்கள் என்ற அச்சத்தில்.அந்த அச்சமே ஆண்டைகளை வன்முறைக்கு தூண்டுகிறது.பெண்களின் மேலான ஆடைகட்டுபாட்டுக்கும் அடிப்படை இதுவே.ஆடை கட்டுபாட்டை மீறும் பெண் ஆணாதிக்கத்தை அப்பட்டமாக அவமதிக்கிறாள்."நான் சுதந்திரமானவள், உனக்கு சமமானவள்" என தெருவிலிருக்கும் ஆண்களுக்கு பகிரங்கமாக அறிவிக்கிறாள்.ஆண்களால் அதை ஏற்கமுடிவதில்லை.உடனே போர் மூள்கிறது.கை வைக்க முடியாமல் சட்டம்/சூழல் தடுக்கும் பட்சத்தில் வார்த்தை வன்முறையால் ஆண்கள் தம் மனபுண்ணை ஆற்றிகொள்கின்றனர்..இன்று தெருக்களில் தலித்துகள் செருப்பு போட்டு நடக்கும்போது எதுவும் செய்ய இயலாமையில் ஆண்டைகள் வெறுப்புடன் எழுந்து கதவை சாத்திகொள்கின்றனரல்லவா?அதே உளவியல் தான் இங்கும்.

0 comments: