Thursday, May 28, 2009

394. தமிழ்செல்வன் Vs. விஷால்

இனம் என்றால் என்ன என்று யோசித்தால் உடனடியாக சாதி தான் நினைவுக்கு வருகிறது.என்னதான் சாதியை ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று வீராப்பு பேசினாலும் இனத்தை பற்றி பேசினால் ஒரு கட்டத்தில் சாதியை பற்றி பேசித்தான் ஆகவேண்டும்.தற்கால படித்த தமிழ் சமூகத்தில் சாதியின் கட்டுமானமும் வீரியமும் குறைந்துவிட்டது.கலப்பு திருமணங்களும், காதல் மணங்களும்,தமிழ் சினிமாவும், பத்திரிக்கைகளும், நகர்மயமாக்கலும் சாதியின் வீச்சை நகர்புறத்தில் பெருமளவு குறைத்துவிட்டன என்கிறார்கள்.அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம்.

கொங்குநாட்டில் வேளாண்மை செய்துவாழ்ந்த குடிகளின் கலாசாரம் காலபோக்கில் கொங்கு மண்ணின் கலாசாரமாக மாறியது.கொங்கு நாட்டில் வேளாண்மை செய்து வந்த குடிகள் நாள்போக்கில் கொங்கு வெள்ளாளர் என்ற சாதியாக உருவெடுத்தனர்.குறும்பாடுகளை மேய்த்து வந்தவர்கள் குறும்பர் எனும் சாதியாக உருவெடுத்தனர்.குடியானவன் வீட்டுக்கு விருந்தினராக போனால் கவனிப்புக்கு சொல்லவா வேண்டும்?விதவிதமான காய்கறிகள்,அறுசுவை உணவு என்று படைத்து அசத்திவிட மாட்டார்களா?இந்த கவனிப்புதான் நாள்போக்கில் விருந்தோம்பல் என்ற கலாசாரமாக உருவெடுத்தது.இன்றைக்கும் கொங்கு நாட்டு கவுண்டர் வீட்டுக்கு போனால் சாப்பிடாமல் விடவே மாட்டார்கள்.

குடியானவர் கொண்டாடிய பொங்கல் பண்டிகை நாள்போக்கில் அனைவரும் கொண்டாடும் பண்டிகையானது.இருந்தாலும் விவசாயிகள் வீட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் அளவுக்கு சிறப்பாக மற்றவர்களால் கொண்டாடவே முடியாது.

தமிழ் குடி சாதிகளாக நாள்போக்கில் உருவெடுத்தபோது தமிழ் கலாசாரம் சாதிகளால் தான் பாதுகாக்கப்பட்டது.கும்பிடும் சாமி,சாப்பிடும் உணவு,அணியும் உடை,செய்யும் தொழில் என்று அனைத்தையும் சாதி கட்டுமானம் கட்டுகுலையாமல் காத்து வந்தது.கலாசாரம் என்பது மேலே சொன்ன அனைத்தின் கூட்டுகலவை தான். சாதி கட்டுமானம் குலைந்தபோது முதலில் மாறியது கலாசாரம் தான்.சாதி அழிய அழிய உணவு,உடை,தொழில்,கலாசாரம் என்று அனைத்தும் மாறிவிட்டது.

குனிந்த தலை நிமிராமல்,தகப்பனும் தாயும் கைகாட்டிய அத்தைமகனை மட்டுமே மனந்து பழகிய தமிழ்பெண் என்று டம்பபையை தோளில் மாட்டிக்கொண்டு வேலைக்கு போய் தெருவில் எதிர்ப்படும் அன்னிய ஆணை கண்டு காதல் கொண்டாளோ அன்றே தமிழ்நாட்டில் சாதிகளின் சமத்துவத்துக்கு அல்லது சாதி அழிப்புக்கு சாவுமணி அடிக்கப்பட்டுவிட்டது.தமிழ் கலாசாரமும் அன்றுமுதல் அடியோடு மாறிவிட்டது.உண்மையில் நாம் இதற்காக வருந்துவதை விட மகிழ்ச்சி அடையவேண்டிய காரணங்கள் தான் அதிகம்.

சாதி என்பது கெட்ட வார்த்தை என்கிறவர்கள் கூட ஒரு கட்டத்தில் ஜாதியில் சரணடையத்தான் வேண்டியிருக்கிறது.சரி..சாதியை ஒதுக்கி விட்டு தமிழினத்துக்கு வருவோம்..தமிழினம் என்பது என்ன?பல சாதிகளின் கட்டுமானம் தான் தமிழினம்.இனம் என்பது பிறப்பால் வருவது தான். கவுண்டர், தேவர், வன்னியர், முதலியார், தேவேந்திரர் குலத்தவர், நாடார் போன்ற சாதிகளில் பிறந்தால் ஒருத்தர் பச்சை தமிழராகிறார். ஒக்கலிகர்,நாயக்கர்,ரெட்டி,அருந்ததியர்,மேனன்,நாயர் ஆகிய சாதிகளில் பிறந்தால் வளர்ப்பு தமிழராகிறார் (நன்றி:பாரதிராஜா).வீராமாமுனிவர், ஜார்ஜ் ஹார்ட், எம்ஜிஆர் மாதிரி கவுரவ தமிழர்களும் (கவுரவ டாக்டர் மாதிரி) உண்டு. கலப்பு திருமணம் செய்யும் பிள்ளைகள் தந்தையின் சாதியை அடைகின்றன.

தமிழ் கலாசாரம் என்பது இந்த சாதிகளின் கலாசாரம் தான். சாதிகலாசாரத்தை ஒதுக்கிவிட்டு தமிழ் கலாசாரத்தை ஏற்பது என்பது எத்தனை தூரம் சாத்தியம் என்பது கேள்விக்குறிதான்.இருந்தாலும் அப்படிப்பட்ட பலரை நான் சந்தித்திருக்கிறேன். இவர்கள் தமிழ் செல்வன், நெடுஞ்செழியன் என்கிற மாதிரி பொதுவான பெயர்களை வைத்துக்கொள்வார்கள். தமிழினம், தனித்தமிழ் போன்ற கோட்பாடுகளில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்.இவர்களது சாதிமறுப்பு சின்சியரானது.இருந்தாலும் இவர்களது கலாசாரம் தான் உண்மையான தமிழ் கலாசாரம் என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை.இவர்கள் தமிழ்நாட்டின் மையநீரோட்டத்தை விட்டு விலகியவர்களாக்வே எனக்கு தென்படுகிறார்கள்.நமது வசதிக்காக இவர்களை தமிழ் செல்வன் க்ரூப் என்று வைத்துக்கொள்வோம்.

கலாசார அடையாளத்தை முற்றிலும் துறந்த ஒரு கும்பல் தமிழ்நாட்டில் உலா வருகிறது.இவர்கள் பெயரை வைத்து இவர்கள் என்ன தேசம் என்று வேண்டுமானால் கண்டுபிடிக்கலாமே ஒழிய என்ன இனம், மொழி, சாதி என்பதை கண்டுபிடிக்கவே முடியாது.விஷால்,ராஜ்,ப்ரீதி,ப்ரியங்கா,அநிருத் என்கிற மாதிரி இவர்கள் பெயர் இருக்கும்.சர்வதேச மொழியை தான் பேசுவார்கள்.சர்வதேச தொலைகாட்சி சேனல்களை தான் பார்ப்பார்கள்.இப்போது தொலைகாட்சி பார்ப்பது கூட ஒழிந்து இவர்களிடையே இணையம் பிரபலமாகி வருகிறது.நமது வசதிக்காக இவர்களை விஷால் க்ரூப் என்று வைத்துக்கொள்வோம்.

தமிழ் செல்வன் க்ரூப்புக்கும், விஷால் க்ரூப்புக்கும் இடையே இருக்கும் பொதுவான ஒற்றுமை இவர்கள் மையநீரோட்டத்தை விட்டு விலகியிருப்பதே ஆகும்.இவர்கள் இருவரும் மைய நீரோட்டத்தை பல காரணங்களால் வெறுப்பவர்கள்.தமிழ் செல்வன் க்ரூப் மைய நீரோட்டதை தனக்த்தே கொண்டுவர முயற்சித்து தோல்வி அடைந்துவிட்டது.அதனால் அவர்களுக்கு மைய நீரோட்டத்தின் மேல் கோபம் அதிகம். விஷால் க்ரூப்புக்கு மைய நீரோட்டத்தில் இருப்பவர்கள் பட்டிக்காட்டான்கள் என்ற நினைப்பு.அதனால் அவர்கள் மையநீரோட்டத்தை விட்டு விலகி இருத்தல் மட்டுமின்றி பல சமயங்களில் அதை எதிர்த்தே செல்வார்கள்.உதாரணத்துக்கு பொதுசனம் ரசிக்கும் நாவல்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை இவர்களுக்கு பிடிக்காது.மாற்று மொழி படம் தான் பார்ப்பேன்,தமிழ் படம் பார்த்ததே கிடையாது என சத்தியம் செய்வார்கள்.பொது இடங்களீல் தமக்குள் தமிழில் பேசிக்கொள்ளவே மாட்டார்கள்.ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள்.பொதுமக்களின் மனோபவாத்தை பொதுபுத்தி என்பார்கள்.தமக்கு அந்த மனோபாவமே வரகூடாது என்று சொல்லி தள்ளி நிற்பார்கள்.

தனித்தமிழ்,இன அடையாளம், ஆங்கில வழிக்கல்வி போன்ற பல விஷயங்களில் தமிழ் செல்வன் கும்பலுக்கும் விஷால் கும்பலுக்கும் இடையே அடிக்கடி மோதல் வருகிறது.ஒரு விதத்தில் இது காலம் காலமாக நடக்கும் மோதல் தான்.1940,30களில் தமிழ் சமூகம் குடுமி வைத்திருந்தது.பிரிட்டிஷ்காரனை பார்த்து அப்போதைய விஷால் க்ரூப் கிராப்பு வைக்க ஆரம்பித்தது.அப்போது கிரபபு வைத்தவனை எல்லோரும் கிண்டல் செய்வார்கள்.கொஞ்ச நாள் கழித்து கிராப்பு வைத்தவன் எண்ணீக்கை அதிகமாகி அவர்கள் எல்லோரும் சேர்ந்து குடுமி வைத்தவர்களை கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள்.கடைசியில் கிராப்பு வென்று குடுமி ஒழிந்தது.

இந்த சண்டை அடுத்து வேட்டி வெர்சஸ் பேண்ட் என்பதாக மாறி அதில் விஷால் க்ரூப் கடைசியில் ஜெயித்து விட்டது.இன்று தமிழ் செல்வன் க்ரூப்பும்,விஷால் க்ரூப்பும் இருவருமே வேட்டி அணீவதில்லை.மைய நீரோட்டத்தில் இருப்பவன் தான் வேட்டி அணிகிறான்.

இப்படி பல தளங்களில் இந்த இரு க்ரூப்புகளும் மோதியே வந்துள்ளன.எந்த சமூகத்திலும் மைய சமூகம் எந்த க்ரூப்பை ஆதரிக்குமோ அதுதான் இறுதியில் வெல்லும்.வரலாறு வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுவதுதான்.தமிழகத்தில் தற்போது மையநீரோட்டத்தில் இருக்கும் சமூகம் விஷால் க்ரூப்பின் பக்கம் திரும்பியிருப்பதாக தான் படுகிறது.விஷால் க்ரூப்பில் சேரத்தான் மையநீரோட்டத்தில் இருக்கும் சமூகம் ஆசைப்படுகிறது.கணிணீதொழில் புரட்சியும், கான்வென்டு கல்வியும் இந்த ஆசையை நிறைவேற்றுவதில் பெரும்பங்கு வகித்தன. "மொழி அழிகிறது, கலாசாரம் அழிகிறது" என்று தமிழ் செல்வன் க்ரூப் புலம்புவதெல்லாம் இந்த போரின் பின்விளைவுதான்.

5 comments:

குமரன் (Kumaran) said...

செல்வன்,

2 கேள்விகள்.

1. நீங்கள் தமிழ்க்குடிகள் = சாதிகள் என்று சொல்வது கவுரவத் தமிழர் ஜியார்ஜ் ஹார்ட் சொல்லிப் படித்திருக்கிறேன். ஆனால் இணையத்தில் எத்தனை பேர் இதனை ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்கள்? வடக்கிலிருந்து ஒரு கூட்டம் வந்த பின்னர் தான் சாதியே தமிழகத்தில் நுழைந்தது என்று தானே இன்றும் பலரும் நம்பிக் கொண்டிருக்கிறோம்!

2. நான் தமிழ்செல்வன் குழுவா விஷால் குழுவா ரெண்டுங்கெட்டானா? :)

செல்வன் said...

வாருங்கள் குமரன்

ஜாதி என்பது இனகுழுக்கள் தான்.உலகில் அனைத்து நாடுகளிலும் இனகுழுக்கள் உண்டு.அதேபோல் தமிழ்கத்திலும் ஆதிகாலம் தொட்டே இருந்திருக்கும்.ஜாதிகளின் உயர்வு,தாழ்வை கற்பிக்கும் வருணாசிரமம் நிலபிரபுத்துவ காலத்தில் தமிழ்குடிகளிடையே பரவியிருக்கும்.இது வடக்கே இருந்து வந்ததாக இருந்தாலும் வடவர்கள் குடியேற்றத்தால் வந்தது அல்ல.தமிழ்நாட்டிலேயே ஆதிகாலம் முதல் இருந்த சாதிகள் வருணாசிரமம் வந்தபிறகு அந்த வருணங்களுக்குள் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டன என்றுதான் நான் நினைக்கிறேன்.உதாரணத்துக்கு தமிழ்நாட்டின் ஆதிகுடிகளான வன்னியர், தேவர் போன்றோர் வருனாசிரமம் வந்தபிறகு க்ஷதிரியராக தம்மை கருதிக்கொண்டிருப்பார்கள். இது என் கருத்துதானே ஒழிய வரலாறா என்ன என்று எனக்கு தெரியவில்லை:-)

நீங்கள் தமிழ்செல்வனா விஷாலா என்று எனக்கு தெரியாதே குமரன்.நீங்கள் தான் சொல்லவேண்டும்:-))

கார்த்திக் said...

அருமையான கட்டுரைங்க செல்வம்.

// நான் தமிழ்செல்வன் குழுவா விஷால் குழுவா ரெண்டுங்கெட்டானா? :) //

நாம கடவுள் பாதி மிருகம் பாதி கேஸ் :-))

பழமைபேசி said...

நான் விருந்தினரா வந்தேன்... ச்சும்மா, நாட்டு நடப்பு பாக்குறதுங்க அண்ணாச்சி!

செல்வன் said...

வாங்க தமிழ்செல்வன்+விஷால் கார்த்திக்:-))

பழமையண்னா

வாங்க...வாங்க...காப்பி சாப்புடறீங்களா?முதல் தடவை வந்திருக்கீங்க...விர்ச்சுவலா ஒரு காப்பியும் புல்மீல்ஸும் தந்ததா நினைச்சுக்குங்க:-)))